முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எங்கே தேடுவேன்?

 


கணபதி விலாஸ் மிடில் ஸ்கூல்.


மன்னார்குடி பஸ் ஸ்டாண்டிலிருந்து ஊருக்குள் நுழைந்து தூய வளனார் பள்ளிக்கூடம் தாண்டி கீழப்பாலத்துக்கு முன்னால் சின்னதாய் 50-70 டிகிரி பெண்டாகும் ரோட்டில் அந்த பெண்டிற்கு முன் அப்படியே நேர்குத்தாய் நுழைந்து, இரண்டாம் லெஃப்ட் கட்டில் திரும்பி, முதல் தெருவில் தொடர்ந்தால், நான்குசாலை சந்திப்பிற்கு முன் வலது புறத்தில் நீல பெயிண்டில் ஊறிய மரச்சட்டத்தில் மேலிருந்து கீழாய் ஓடும் கம்பித்தாழ்வாரம், நடுவில் நுழைவுக்கதவு. அதுவும் நீல மரச்சட்டம், மேலிருந்து கீழாய் கம்பி.


நாலாம் வகுப்பில் சேர அப்பாவின் விரல் பிடித்து, பயம் கலந்த தயக்கத்துடன் அடியெடுத்து வைத்த நாள் இன்றும் நினைவில்.


பிராமண குடும்பங்களால் நிறைந்த அந்தத்தெரு, புதுத்தெருவில் முட்டுமிடத்தில் இருந்த தொடர்வீடு குடியிருப்பில் ஒன்று எங்களது, வாடகை வீடு.


பள்ளி செல்லும் வழியெங்கும் மாமாக்கள், மாமிகள், அண்ணாக்கள் வழிந்த அந்தத்தெருவில் நாங்கள் செவன் ஸ்டோன் விளையாடி முதுகில் சொத் சொத்தென பந்தடி வாங்கி ஓடி இவர்கள் வீட்டு ரேழிகளில் பதுங்குகையில் யாரும் எங்களை விரட்டியதுமில்லை, காட்டிக்கொடுத்ததுமில்லை. ப்ராமண திருநாட்களில் உற்சாகமாய் சாலைகளில் இறங்கி பாரம்பரிய உடைகளில் அவர்கள் கதை பேசி நிற்பது இன்றும் மனக்கண்ணில் அழியாத சித்திரமாய்.


கிரிக்கெட்டும் செவன் ஸ்டோனும் அவர்களது குழந்தைகளை எங்களுடன் ஆரவாரமாக பிணைத்திருந்த நாட்கள் அவை.


சாவித்திரி டீச்சர் நடத்தியதாலேயே கணக்கில் கில்லிகளானோம் நாங்கள். அவரைப்போல குறையே இல்லாத  புன்னகையை, எதிரில் நிற்கும் மாணவர்களை அன்பில் நனைத்து அவர்களுள் மரியாதையை தானே தோன்றவைத்த மந்திரப்புன்னகையை என் வாழ்நாளில் இன்றுவரை வேறெங்கும் கண்டதில்லை.


'உனக்கு எல்லாம் எளிதில் புரிகிறது. விடைகளும் எளிதில் வசப்படுகிறது. ஆனால் நீ விடை சொன்னவுடன் "இதுதான் சரியான விடையா?" என நான் கேட்டால் உடனே ஒரு தயக்கம் வருகிறது. அது நல்லதல்ல. உன் விடையில் உறுதியான நம்பிக்கை கொண்டு, "என் விடை சரிதான்!" என தைரியமாய் சொல்லவேண்டும்' என்று என்னுள் தெளிவை விதைத்த வரலாற்று ஆசிரியையும் இந்தப்பள்ளியில்தான்.


சிங்காரவேல், அன்றைய ஆப்த நண்பன். பாதி உயரம் மட்டுமே தடுப்புச்சுவராய் கொண்ட வகுப்பில் தரையில் அமர்ந்திருக்கும் எங்கள் தலைகளில் முகமற்ற வளைக்கரங்கள் நறுக்கென கொட்டி 'விகடன் தாத்தா கொம்பை' விதைத்தபோதெல்லாம் விடாது வகுப்பு வகுப்பாய் பாய்ந்து வளையல்களை பிடுங்கி வந்து வலித்தவர் கண்ணில் காட்டி 'இதுவா? இதுவா?' என பழிக்கோபத்தில் அவன் கேட்க, நாங்கள் தேர்ந்து சொல்ல, 'அழைத்து வருகிறேன் இப்பவே அவளை' என ஓடிச்சென்று வெறுங்கையோடு வருவான்; ஒரு வளையலை பிடுங்கும்போதே மற்ற வளையல்களும் நொறுங்கியதால் எவிடன்சே கலைந்துபோன சோகத்தில் :-)


ராஜகோபாலசாமி கோவில் கோபுரத்தில் முதல் அடுக்கில், தானே சுழலும் மந்திரப்புல் ஒன்றை அவன் இனம் கண்டு காட்ட, நான் ஏறிப்பிடுங்கி விரலிடுக்கில் இறுகப்பிடித்து நிற்க, அது கரகரவென்று நானா திசையிலும் மெல்லச்சுழல, மாலைக்கதிரொளி நனைத்த அந்த தங்கத்துகள் நொடி, முதல் முதலாய் நான் என் வாழ்வில் கண்ட மிரகிள்...


திருவேங்கடம், நாமம் தீட்டிய நெற்றியோடு கீழப்பால சாலை பெண்டுக்கு முன் வலது பக்க முனையில் நீல பெயிண்ட், கம்பி ரேழி வைத்த வீட்டின் உள்ளிருந்து ராமானுஜாழ்வார் போன்றதொரு உருவ அமைப்பில் அதிகாலை ஐந்தரை மணிக்கு, கூப்பிட்ட என் குரல் பிடித்து, வெளியே வந்து என்னோடு சாலையில் இறங்கி நடந்து 'ஏக் கிசான் நே ஏக் காவ் மே' படிக்க தக்‌ஷிண பாரத் ஹிந்தி பிரசார சபா (எங்கள் பள்ளியில் ஒரு வகுப்பில்) வருவான். அவனும் உற்ற நண்பன், ப்ரவேஷிகா வரையில். 


அவன் வீட்டு ரேழியில் எப்போதும் நின்றுகொண்டிருக்கும் பச்சை சீட் ஹெர்குலஸ் சைக்கிள் இன்றும் வண்ணம் மாறாமல் நிக்குது நினைவில்.


இன்று பல பத்தாண்டு கடந்தபின் அதே தெருவில் மாலை மங்கிய முன்னிரவின் தொடக்கத்தில் மெள்ள காரினுள் அமர்ந்து பள்ளியின் சுவடை தவிப்பாய் தேடியது என் பத்து வயது கண்கள்...


பல தொடர்வீடுகள் இருந்த இடங்களில் இன்று நவ யுக தனி வீடுகள். 


இடையில் இங்கொன்று அங்கொன்றாய்  ஆளற்று இருண்டு கிடந்த பழைய வீடுகள்; அதே நீலச்சாய / பச்சைச்சாய மரச்சட்ட கம்பி ரேழிகள், பல கோணங்களில் மடங்கியும் சாய்ந்தும் சரிந்தும், இடிந்துபோன நினைவுகளின் சிதறல்களாய்.


வாழ்க்கை நடத்திய யுத்த களத்தின் இடிபாடுகளுக்குள் நான் தேடிய நினைவுப்பேழை இன்று உருமாறி நிற்கிறது, இரண்டு மாடி வெள்ளைக்கட்டிடமாய்... கணபதி விலாஸ் என்கிற பெயர் தாங்கிய பலகை மட்டுமே நினைவின் எச்சமாய் வெளிச்சுவரில் மர இலைகளின் பின்னே தன்னை மறைத்துக்கொண்டு சுருங்கியிருக்கிறது, தொடக்கப்பள்ளியாய்.


மரக்கிளை ஒன்று மளுக்கென முறிந்ததை கண்ட சிறுவனின் நெஞ்சில் எழும் கேவல் போன்ற ஏதோவொன்று என்னுள் எழும்பி அடங்கியதை அந்த கட்டிடத்தின் உடைந்துபோன பழைய கற்களுள் எஞ்சிய (இன்றும் அங்கு விழுந்து கிடக்கும்) ஒரு விள்ளல் மட்டுமே கண்டிருக்கும், கேட்டிருக்கும்...


அதன் பின்னிரவில் காவிரிக்கரையையொட்டி விரைந்த சாலையொன்றில் மெல்ல பின்னோக்கி உருளும் நினைவுகளை சோகமாய் சுமந்தபடி அந்த பத்து வயதுக்கண்களை தாங்கிய முகத்தில் சற்றே வெளுத்த தலைமுடியைக்கோதியபடி வாகனத்தை முன்செலுத்தும் முயற்சியில் நான், இதுவரை எவரும் கண்டறிந்து வெளியிடாத ஏதோவொரு பௌதீக விதியால் நிகழ்காலத்திற்கு மீண்டேன்.


உருமாறிய கணபதி விலாஸ் கம்பீரமாய் பழைய பொலிவுடன் இப்போதும் நிக்குது மனதில்.


பல நல்லாசிரியர்களை தந்த அந்தப்பள்ளி, என்னுள் விதைத்திருந்த விதைகளின் விதைகளை இன்று அறுவடை செய்கிறது காலம்.


அறுவடைக்குப்பின்னும் தழையுதே நினைவுப்பயிர்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்