முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாட்டாம, தீர்ப்ப மாத்து! வாழ்க்க ப்ரச்னை!


கல்லூரி நண்பன் தீவிரமாய் காதலித்தான்.

சொந்த ஊரில் சில தெருக்கள் தள்ளி அவள் வீடு.

பார்வை பறிமாறி, அவன் மையலாகி, நட்புகள் உசுப்பேற்ற, கடிதம் ஒன்று எழுதினான்.

டிபிகல் காதல் கடிதம்:

அன்பே,

உன் நினைவால் வாடுகிறேன்.
உன் ஒற்றைப்பார்வை என் தீபாவளி.
உனக்கு இளையராஜா பாட்டு பிடிக்குமா?
பூவே இளைய பூவே எப்போ ரேடியோல கேட்டாலும் தெரில, அதென்னமோ ஒன் நினப்பு...
உன் பார்வையில் ஓராயிரம்...!

என்பதாகவே முதல் கடிதம் ப்ளஸ் அநேக follow up கடிதங்களும்.

ஆனால் கடிதம் கொடுப்பதில் ஒரு சிக்கல். அவள் வீட்டில் கட்டுக்காவல் அதிகம், வாசலில் நாய் வேறு!

நண்பன் ஒரு சூப்பர் ஐடியா செய்தான். அவள் வீட்டுத்துணிகளை இஸ்திரி செய்யும் கடை, அவன் தெரு முனையில். இஸ்திரி காரருக்கு அவன் வயதில் ஒரு பெண். அவர் வேலையாக எங்காவது செல்கையில் கடையில் இருப்பாள். அவளை நட்பு பிடித்தான்.

ஏராளமான பயம் ப்ளஸ் பிகுவுக்குப்பிறகு அவனது கடிதங்களை அடுத்த தெரு பெண்ணின் துணிக்குள் வைத்து அவள் டெலிவரி செய்வதாக ஏற்பாடு.
அந்த விடுமுறை முடிந்து கல்லூரி வந்தவன் அன்று பூத்த தாமரையாய் மகிழ்வோடு பல நாட்கள் சுற்றிக்கொண்டிருந்தான்.

இப்படி நாளொரு விடுமுறையும் பொழுதொரு லெட்டர் டெலிவரியுமாக நாட்கள் நகர்ந்தன.

'ரெஸ்பான்ஸ் எப்புடி?' என நாங்கள் கிண்டும்போதெல்லாம் தளும்புவான். 'பார்வையாலயே பதில் சொல்றாடா...என்ன பவர் தெரியுமா...ஹையோ!'

பக்கிகள் போல கேட்டுக்கொண்டிருக்கும் எங்களுக்கெல்லாம் அன்றே யாரையாவது காதலிக்கலாம் என உத்வேகம் வரும். கண்ணாடியில் முகம் பார்த்து அமைதியாகி விடுவோம் (மீச கூட மொளக்கலயே அய்யகோ!).

செமஸ்டர் விடுமுறையில் ஊருக்கு சென்றவன் காலேஜ் திறந்து ஒரு வாரமாகியும் திரும்பவில்லை.

நாங்கள் கவலைப்பட தொடங்கிய ஒரு அதிகாலையில் ஹாஸ்டல் திரும்பினான்.

'டேய்! எங்கடா போன? ஏண்டா மொகமெல்லாம் வீங்கியிருக்கு?' என நட்புகள் சூழ, தோள்பட்டை பையை கூட கீழிறக்காமல் விசும்பி அழத்தொடங்கினான். அவனிடமிருந்து விசும்பல்களுக்கிடையில் கிடைத்த அதிர்ச்சி நிகழ்வுகள் எங்களை பல நாட்கள் தூங்கவிடவில்லை... 'நமக்கும் இப்படி ஆய்டுமோ!' என்ற பயத்தில்.

அதாகப்பட்டது, நண்பன் ஊருக்கு போனானா, அடுத்த நாள் ஒரு புது லெட்டர எழுதி எடுத்துகிட்டு கடைக்கு இஸ்திரிகாரர் இல்லாத நேரமா அவன் போய் அவரு பொண்ணுகிட்ட லெட்டர கொடுக்க, அந்த நேரம் அவரு திரும்ப வர...!

பஞ்சாயத்து கூடியது நம்ம நண்பன் வீட்டுல.

இஸ்திரி: என் பொண்ணுகிட்ட லெட்டர் குடுத்தியா?

நண்பன்: ஆமாங்க.

இ: எத்தன நாளா நடக்குது இது?

ந: ஆறு மாசமா...

நண்பனின் அப்பா: நின்று கொண்டிருந்தவர் நெஞ்சைப்பிடித்துக்கொண்டு உட்கார்கிறார்.

இ: வூட்ல எதிர்ப்பு எவ்ளோ இருந்தாலும் ஓடிப்போயாவது கல்யாணம் பண்ணிக்கலாம்னு எழுதியிருக்கியேடா அயோக்யப்பயலே! உன் பேச்ச நம்பி என் பொண்ணு கிளம்பிருந்தா என் மானம் மரியாதை என்னாயிருக்கும்!!!!

நண்பனின் அப்பா: கிட்டத்தட்ட மயக்க நிலையில்...

நண்பன்: அதிர்வாய் நெஞ்சைப்பிடித்துக்கொண்டு தரையில் அமர்கிறான்.

இ: ஏய்!! என்னா பதில காணும்???

நண்பன்: இல்லீங்க...வந்துங்க...அது ஒங்க பொண்ணுக்கில்லீங்க... ரெண்டு தெரு தள்ளி...

இ: வாய்லயே போட்டன்னா! பொய்யி வேற பேசிறியா! என் பொண்ண நாலு அறை வுட்டதும் எல்லா உண்மையையும் கக்கிட்டாடா. எலேய், லீவுலயெல்லாம் பாத்திருக்க, லெட்டர் தந்திருக்க, தெருவுக்கே தெரியுமாம்டா, என்னத்தவிர!!?
இதுவரைக்கும் இருவது லெட்டர் தந்திருக்க! காமிக்கட்டுமா??

நண்பனின் அப்பா: மூர்ச்சை

நண்பன்: தலை சுற்றி கண்ணெல்லாம் இருட்ட...இருவதா!!!!!! அப்ப ஒண்ணு கூட கொடுக்கலயா!!!!!! ஐயையோ!

காதல் பிசாசு உலுப்ப நண்பன் எழுதிய அத்தனை லெட்டர்லயும் பய புள்ள பொண்ணு பேர ஒரு முறை கூட எழுதலியே!!!!!!!

ஒரு இஸ்திரிகாரருக்கு மருமகனாகியிருக்கவேண்டியவன், மொத்து வாங்கி முகமெல்லாம் வீங்க அழுது, இஸ்திரி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு மீண்டு வந்த கதை எங்களை நெடுநாள் துரத்தியது.

சம்பவம் நிகழ்ந்து ஒரு வருடம் கழித்து நம்ம நண்பன் வாங்கிய அடியை எல்லாம் மறந்து தைரியத்தை வரவழைத்துக்கொண்டு இஸ்திரி பெண்ணை மடக்கி 'என்ன ஆச்சி?' என கேட்க, 'அண்ணே, ஒங்களுக்கு ஒதவி பண்ற ஆசைல ஒப்புகிட்டாலும், மாட்டிகிட்டா அப்பாரு கொன்னுடுவாருங்குற பயத்துல லெட்டர் எதையும் கொடுக்கவே இல்லைண்ணே...'.

எமோஷனல் எரிமலையாய் உள்ளெழுந்த குமுறலை அடக்கிக்கொண்டு நண்பன் கேட்ட சரித்திர முக்கியத்துவ கேள்வி:
'சரி, லெட்டரதான் கொடுக்கல. அம்புட்டயும் ஏம்புள்ள சேத்து வச்ச????????'

'கவிதையா எளுதிரிந்தீங்களா... புடிச்சிருந்தது... கிளிக்க மனசு வல்லண்ணே...'

பின் குறிப்பு 1:
இன்று அவன் ஒரு பெரிய கவிஞன். 

பின் குறிப்பு 2: 
அந்த மின்னல் விழியாளுக்கு இந்த பக்கி பற்றியோ, அவளால் இவன் வாழ்வில் நிகழ இருந்த பெருந்துன்பமோ தெரியாது. அவளைப்பொருத்தவரை சாலை கடக்கையில் எதிர்ப்படும் ஒரு புன்னகை முகம்அவன். அவ்வளவே.

பின் குறிப்பு 3: 
எங்கள் அன்பு நண்பனின் இடத்தில் அந்த இஸ்திரிக்கடையில் இப்பொது கவிதை ரசிகையின் கெடா மீசை கணவன் இஸ்திரிப்பெட்டி தேய்த்துக்கொண்டிருக்கிறான்.

பின் குறிப்பு 4: 
கல்லூரி முடிக்கும்வரையில் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு லவ்வே வர்ல பாஸ்!

ஆனால் இஸ்திரி கடைய எங்கெயாவது க்ராஸ் பண்ணா ஒரு புன்னகை, மனதில் ஒரு சின்ன தளும்பல்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்