முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

போதி மரம்


பேபி கிளாஸ்ல டீச்சர் மேல மையலாச்சு.

முதலாங்கிளாஸ் டீச்சர் சிலுவையிட, பிரார்த்திக்க, கற்றுத்தந்து, ஏசு அறிமுகமாச்சி.

ரெண்டாங்கிளாஸ் டீச்சர் 'கண்ணாலம் கட்டிக்கலாமா' ன்னதால மெர்சலாச்சு.

மூணாங்கிளாஸ் டீச்சர் கத்துக்குடுத்த பேப்பர் க்ராஃப்ட் (Origami) இன்னும் ஈர்க்குது.

நாலாங்கிளாஸ் கணக்கு டீச்சர் காட்டன் புடவைப்புன்னகை இன்னும் கண்ணுக்குள்ள நிக்கிது.

அஞ்சாங்கிளாஸ்ல 'பதில தைரியமா (confidence) சொல்லணும். நெசமாவான்னு நான் கேட்டாலும்' என்ற ஆசிரியை கீதாசாரியாக இன்றும் மனதில்.

ஆறாங்கிளாஸ் நினைவில்லை.

ஏழாங்கிளாசில் தறி நெசவு சொல்லிக்கொடுத்த ஆசிரியன் எனது வாழ்வில் சேர்த்த சொற்கள் "ஊடு", " பாவு".

எட்டாங்கிளாஸ்ல வரலாற்று மீசை, பாடமெடுக்காமல் கதையளக்க, முதல் பெஞ்ச்சில் இருந்து 'பாடத்த எப்பத்தான் ஆரம்பிப்பாரோ' ன்னு மைன்ட் வாய்ஸ்ல சொல்ல நினைச்சி, வாய்ஸாவே சொல்ட்டியான்னு நெத்திக்கண் திறந்தவர் பின்னாடி நான் ஏற்பாடு செய்த பெரும்பாண்டி டூருல பசங்களோட சேந்து பேர் பதிஞ்சது நினைச்சி சிரிப்பாச்சி.

ஒன்பதாங்கிளாஸ்ல அறிவியல் டீச்சர் வீக்கெண்டுல என்னை தியேட்டர்ல (நான் வீட்டில் அனுமதி பெற்று) பாத்தத வீக் டேல வீட்டுக்கு சொல்ல, பள்ளியிலிருந்து திரும்பிய என்னை பழுக்க காய்ச்சிய கரண்டி வரவேற்றது! மிஸ் கம்யூனிகேஷன்!

பத்தாம் வகுப்பில் என்னை கரம் பிடித்து பணிரெண்டாம் வகுப்பு வரை எண்களின் உலகிற்குள் அழைத்துச்சென்ற கணித ஆசிரியர். 

பதின் வகுப்புகளில் (11_ 12) கடினமான இயற்பியலை சொந்த பிள்ளைக்கு போல சொல்லித்தந்த இயற்பியல் ஆசிரியர்.

இஸ்லாமிய பள்ளியில் பதின் படிப்பு முடித்து விடைபெறுகையில் 'வாழ்க்கை இனிமையான குபிர் போன்றது' என கையொப்பமிட்ட வேதியியல் ஆசிரியர்.

கல்லூரி முதலாண்டில் ஆங்கிலத்தை நேசிக்க கற்றுத்தந்த ஆங்கில பேராசிரியர்.

இரண்டாமாண்டில் குண்டுமணி கூட மூளைக்குள் செல்லாதவாறு எலக்ட்ரிகல் சர்க்யூட் சொல்லித்தந்த பேராசிரியர்.

மூன்றாமாண்டு கணணி மையத்தின் கடவுச்சொற்களை கையில் தந்து அட்மின் ஆக்கி அழகு பார்த்த பேராசிரியர்.

நான்காமாண்டில் ரோபோடிக்ஸ் பாடத்தை ஒரே வகுப்பில் நடத்தி முடித்து, எங்கள் அனைவரையும் 80 சதவீதத்தை தாண்டவைத்த பேராசிரியர் (ஆங்கிலம் நன்றாக எழுதினால் ஒரு பக்கத்துக்கு அஞ்சு மார்க்! அவ்வளவே!!).

கல்லூரி முடித்து பட்டம் வாங்குவதற்குள் பதவி தந்து அழகு பார்த்த துறைத்தலைவர்...

அடுத்த பல ஆண்டுகள் வாழ்வில் பலர் பல நேரங்களில் ஆசிரியராய் மாறி கற்றுத்தந்தவை ஏராளம்.

அறிவின் மூலம் கற்றது போதும். இனி உணர்வின் மூலம் கற்போம் என முடிவு செய்ததும் நான் தேடிய ஆசிரியை, இயற்கை எனும் பேராசான், இன்று வரை என் கரம் பற்றி கற்றுத்தந்துகொண்டிருக்கிறார்.



வெளியிலிருந்து கற்றது போதும். உன்னுள்ளிருந்தே நீ கற்கவேண்டியது ஏராளம் என அவரது கற்பித்தல் உணர்த்த, பல்லாண்டு முன் நான் ஊன்றிய விதை விந்தையாய் இந்த மழைக்காலத்தில் திடீரென முளைத்தது போல, என்னுள் என்றோ விழுந்த ஏராளமான விதைகள் அவற்றின் போக்கில் வெடித்து முளைத்து என் இருப்பு முழுதையும் பிண்ணிப்பிணைத்துக்கொண்டிருக்கும் இன்றைய நாளிலும் நான் கற்றுக்கொண்டே இருக்கிறேன்!


எனக்கு நானே போதிமரம்!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...