முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திக்குமா திக்காதா?


சின்ன வயதில் திக்குவாய். இடதுகைப்பழக்கத்தை வலதாக மாற்ற சமூகம் முயன்றதன் விளைவு என்பதாக புரிதல்.

பள்ளி வகுப்பில் ஆசிரியர் பெயரேட்டை புரட்ட ஆரம்பித்ததுமே வயிற்றில் பட்டாம்பூச்சிக்கூட்டம் கிளம்பிவிடும், 'திக்காம சொல்லணுமே...'. பெயரும் தொடக்கத்திலேயே வந்து விடுவதால் சுதாரிக்கவும் நேரம் கிடையாது. இதயம் துடிக்க என் முறை வந்தவுடன் எழுந்து நின்று 'உ...உள்ளேன் ஐயா' என்று சொல்லிமுடிக்கும்வரை... அவ்வளவு பதற்றம்.

கூழாங்கல்லை வாயில் அடக்கி, எச்சில் விழுங்கி, 1/2/3/4/5 எண்ணி என ஏதேதோ முயன்றாலும், கல்லூரிப்பருவம் வரை தொடர்ந்தது இது.

முதலாண்டு, கல்லூரி அருகில் பேருந்து சந்திப்பில் என் வகுப்பு பெண் 'இந்த பஸ்சு காந்திபுரம் போகுமா?' என கேட்டதும் காது நுனி சிவந்து இதயம் தாறுமாறாகி (காதல்ல இல்ல, திக்குவமோன்னு பயத்தில!) நாக்கு மேலன்னத்தில் ஒட்டிக்கொள்ள... பஸ்சு போயே போச்சி!
அவமானமாய் உணர்ந்து திரும்பி ஓடினேன் விடுதிக்கு.

தீர்வு வெளியில் இல்லை. என்னுள்ளேதான் என்று அன்று தோன்றியது. 

வாசிப்பு, மொழி அறிவு, கல கல பேச்சு என்று மாறினாலும் திக்கல் பயம் விக்கல் போல திடீரென தலை தூக்கும்.

இன்டர் காலேஜியேட் போட்டிகளில் பேப்பர் ப்ரசன்டேசனுக்கு விடாமல் பேர் கொடுத்து, நிறைய கல்லூரிகளுக்கு சென்று பேசத்தொடங்கினேன். 'ஸ்டார்டிங் ட்ரபுள் தாண்டினால் ஜெயிச்சிடலாம்' என்ற நம்பிக்கை வந்த நாட்கள் அவை.

ஆனாலும் மூன்றாமாண்டு வகுப்பிலும் எழுந்து நின்று 'Present Madam' என ஒவ்வொரு வகுப்பிலும் நான் சொல்வது ஒரு பேராசிரியைக்கு கோபமூட்ட ('வேணும்னே செய்யறான். கிண்டல்காரன், ராஸ்கல்!) இன்டர்னல்சில் முட்டை! அது வரை ஒன்றுக்கு அருகில் இரண்டு முட்டைகளையே அதிகம் வாங்கியிருந்த நான் என் வாழ்வில் இலவசமாய் வாங்கிய முழு முட்டை, முதலும் கடைசியுமாய்!

இறுதி ஆண்டில் குவிஸ்சில் கோப்பை ஜெயிக்கும் அளவில் முன்னேறினாலும் எதிர்பாரா திக்கல் 'விடாது கருப்பு' என தொடர்ந்தது.

பின்னாளில் ஐ டியின் உச்சாணி நிறுவனங்களில் பல மொழி, நாட்டு, இன மக்களோடு சகஜமாய் அளவளாவ ஒரு சிறிய புரிதல் கை கொடுத்தது; 'திக்கல் ஒரு உணர்வு சார்ந்த நிகழ்வு மட்டுமல்ல, அறிவு சார்ந்ததும் கூட! திக்குகிற சொல்லுக்கு மாற்று சொல் தேடிப்பார்த்தால் உணர்விலிருந்து அறிவுக்கு ஒரு நொடியில் எண்ணங்கள் தடம் மாற, பயம் தொலைந்துபோய் தேடும் ஆர்வத்தில் கவனம் போகிறது'!

வொகாபுலரியை வளர்த்துக்கொண்டேன். எந்த சொல்லுக்கும் சில மாற்று சொற்களாவது நினைவில் இருக்கும் அளவில். திக்கல் போயே போச்!

ஐ டி பணியை விரும்பி விடுத்து விவசாயியானபின்னும் இன்றுவரை பல கல்லூரிகளுக்கு விரிவுரையாற்றவும், சந்தித்திராத குழந்தைகள், மகளிர், ஆண்கள், முதியவர் என எப்பெருங்கூட்டத்திலும் 'விரும்பி, ரசித்து, உணர்ந்து' பேசுதல் இந்த புரிதலினல் வசமானது. 

திக்கிப்பேசினாலும் தெளிவாய்ப்பேசினாலும் நினைப்பதை அப்படியே கேட்பவருக்கு கடத்த எந்த மொழியும் உதவாது என்ற புரிதலும் வளர, இப்போதெல்லாம் ஒளி ஓவியங்கள், சைகைகள் மூலம் உணர்த்துதலின் அடுத்த தளத்தை நோக்கி நகரவும் இந்த புரிதலே உந்துவிசை ஆனது.

இதற்கெல்லாம் அடிப்படை, அடித்தளம், அடி நாதம் - குடும்ப உறவுகளின் வேற்றுமைப்படுத்தாத / சிறுமைப்படுத்தாத அணுகுமுறை!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...