விலங்கு வேட்டையாடி, காட்டுப்பூ தலையில் சூடி, அருவி நீர் வாயில் நிரப்பி, கானகத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்.
இறையென்று அந்தணர் ஒருவர் வணங்கும் சிலை கண்டான், அவனறியா பக்தி கொண்டான். எச்சில் நீர் உமிழ்ந்து இறையின் சிரம் துடைத்து தன் தலைப்பூவை இறைக்கு சூட்டி, தான் உண்ட மாமிசத்தை பேரன்போடு படைத்து, செல்கிறான்.
அந்தணன் வருகிறான், கண்டதும் மருள்கிறான். காட்டுவாசி மூடன் எவன் என தேடி சலிக்கிறான். தன் வேத விதிப்படி இறை தீட்டு கழித்து பூசித்து நிம்மதியாய் நீங்குகிறான்.
மாமிசமும் மரக்கறியும் மாறி மாறி உண்ட இறை, அந்தணன் கனவில் 'கோபம் வேண்டாம். நாளை நிகழ்வதை பார்' என்று மறைகிறது.
அந்தணன் முன்னரே வந்து ஒளிந்து நோக்க, வேடன் வருகிறான்.
இறை கண்ணில் குருதி கண்டு பதறி கானகத்திடம் வேண்டி பச்சிலை பெற்று (மனிதர்கள் மட்டுமே உடைத்துப்பறிப்பர். வேடுவர் வேண்டிப்பெறுவர்...) இறை கண்ணில் பிழிய... உறைய மறுக்குது குருதி.
அம்பு ஒன்றை உருவி நொடியில் இளநுங்கு சுளை போல் தன் ஒரு கண்ணை விடுவித்தெடுத்து இறை கண்ணில் அப்ப, நிற்கிறது குருதி.
தொடர்கிறது இன்னொரு கண்ணில்!
வேடன் கலங்கவில்லை. காலடி எடுத்து இறை தலையில் வைத்து கட்டைவிரல் கொண்டு கண்ணை அடையாளத்திற்கு அழுத்தி, தன் இரண்டாவது கண்ணை விடுவிக்க முயல, தடுக்கிறது இறை, 'நில்லு, கண்ணப்ப!' என.
திண்ணன் கண்ணப்பனானான். கண் திரும்பப்பெற்றான். இறையுணர்வு ததும்ப கால்கள் செல்லும் திசையறியாது ஆற்றல் தீரும் மட்டும் பித்து நிலையில் நடக்கிறான்.
கண் இருள, பசி வயிற்றைக்கிள்ள, எஞ்சிய ஆற்றலை ஒன்று திரட்டி, கண்ணை 'விழித்து'ப்பார்க்க, பார்வையில் பட்டது அரிசியும் பருப்பும். கை நீட்டி அள்ளுகிறான்...
இரண்டு நாட்கள்... கைகளை கட்டி, உயிர் பிரியும் வரை (பிரிந்தபின்னும்) இவனை அடித்துக்கொன்ற நாகரீக கூட்டத்தை 'நில்'லென்று சொல்ல அங்கு யாருமில்லை.
கருத்துகள்
கருத்துரையிடுக