முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கண்ணி வெடியை மிதித்தவர் கதை!


கண்ணி வெடியை மிதித்தவன் காலடியில் 
அவன் வாழ்வு புதையுண்டு கிடக்கிறது...

காலை நகர்த்தினால் வாழ்வு முடிந்துவிடும்.

என்ன செய்வது?

நீங்கள் இப்போது மிதித்துக்கொண்டிருக்கும் கண்ணி வெடி ஒன்றா, இரண்டா...?!

பதினாறு செல்வமும் பெற்றால்தான் பெருவாழ்வு என எவரோ என்றோ சொல்லிச்செல்ல, அன்று புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளில் தலைமுறை தலைமுறையாய் நின்று கொண்டிருக்கும் வழியில் வந்தவர் நாம்.

'ஏன் மிதித்து நிற்கிறாய்?' என்று யாரேனும் கேட்டால்,'தெரியாதுங்க... எங்க கொள்ளுத்தாத்தா காலத்திலருந்தே இப்படித்தான்' என்போம், நம் கொ.தாத்தாவும் இப்படித்தான் யாருக்கோ பதில் சொன்னார் என்பதையே அறியாமல்!

அதென்ன பதினாறு? அதிலெங்கே கண்ணி வெடி?

காண்போம் வாருங்கள்!...

பதினாறு செல்வங்கள்:

1.கலையாத கல்வி (வெற்றிக்கு வழிகாட்டக் கூடிய கல்வி)

கண்ணி வெடி: எது வெற்றி!

2.குறையாத வயது (நீண்ட ஆயுள்)

கண்ணி வெடி: எத்தைத்தின்றால் பித்தம் தெளியும் என குரங்கின் குடல் முதல் நாம் உண்ணாத மருந்தில்லை! வாழ்வு தேய்கிறது, ஆயுள் நீள்கிறது!

3.கபடு வராத நட்பு (நம்பிக்கையான நல்ல நண்பர்கள்)

கண்ணி வெடி: எவற்றிலும் பயன் மட்டுமே தேடும் மனது, மனிதரிலும் பயன் இருப்பதாய் தோன்றினால் மட்டுமே நட்பு பாராட்டும் நடைமுறை வாழ்வு.

4.குன்றாத வளமை (வளமான வாழ்க்கைக்குத் தேவையான பொருள்)

கண்ணி வெடிகளில் மிகப்பெரியது! பெரும்பாதிப்பு உண்டாக்கக்கூடியது!

குன்றாத வளமை என்பதை பொருளீட்டுதல், தானியங்கள் பெருக்குதல் என்பனவாக தவறாக கற்பிதம் செய்து தறி கெட்டோடும் கூட்டம் நாம்!

ஏழு தலைமுறைக்கும் தீராத சொத்து சேர்த்தவன், எட்டாம் தலைமுறை தரித்திரத்தில் உழலும்!

குன்றா வளமை என்பது அனைத்துயிரின் தேவைக்கும் பகிர்ந்தபின்னும் குறையாத வளமை, அட்சய பாத்திரம்...

அட்சயமல்ல, பாத்திரம்தான் அவசியம். பாத்திரம் எது?!

பூமிப்பாத்திரத்தை நாம் சுரண்டும் 
ஓசை இடையறாது எங்கெங்கும்!



பசுமை குன்றா மண்ணைப்போற்றும் விதமாய் இருந்த, தொடர வேண்டிய நம் வாழ்வு, பேராசை நுகர்வெனும் கண்ணி வெடியில் நிறுத்தியிருப்பது நம் பாதங்களை மட்டுமல்ல, இப்புவியின் அச்சாணியையும்கூடத்தான்! 

5.குன்றாத இளமை (உழைப்புக்குத் தளராத உடல் வலிமை)

கண்ணிவெடி: இன்றைய நஞ்சுதோய்ந்த உணவு! உழைக்க வலிமையற்ற தளர்ந்த உடல் அனைத்து வயதினர்க்கும்!

6.கழுபிணி இல்லா உடல் (நோயற்ற வாழ்க்கை)

கண்ணி வெடி: இன்றைய மருத்துவம். நலமாய் வாழவும் விடாது, நலிந்து சாகவும் விடாது!

7.சலியாத மனம் (கலங்காத மனத்திண்மை)

கண்ணி வெடி: அடுத்தவர் வாழ்வு கண்டபடியே நாமும் ஓடும் போட்டி ஓட்டம், சலித்து துளைத்து உளைச்சலில் துவைத்துவிடும். கலங்காதிரு மனமே என சொல்வதற்கே நேரமில்லை!

8.அன்பகலாத மனைவி (மாறாத அன்பைச் செலுத்தும் மனைவி) / கணவன்

கண்ணி வெடி: நம்மில் அநேகருக்கு அதிகமாய் பரிச்சயமான ஒன்று! வாழும் வரை வீராப்பாய் கால் நகர்த்தாமல் நின்றால்... குடும்பம் சிதறாது :-)

9.தவறாத சந்தானம் (அறிவு, ஆற்றல், ஒழுக்கம், ஆயுள் இவற்றில் தவறி விடாத
குழந்தைகள்)

கண்ணி வெடி: நாம் தவற விட்டதை அடுத்த தலைமுறையிடம் எதிர்பார்ப்பது!

10.தாழாத கீர்த்தி (மென்மேலும் வளரக்கூடிய பொருளும் புகழும்)

கண்ணி வெடி: எது கீர்த்தி எது புகழ் என சொல்லித்தரவும் கேட்டு உணரவும் நேரமற்ற வாழ்க்கை!

11.மாறாத வார்த்தை (வாய்மை)

கண்ணி வெடி: அப்படீன்னா?! ('பேச்சு பேச்சோட இருக்கணும்!')

12.தடைகள் வராத கொடை (இல்லையென்று சொல்லாத உதவி)

கண்ணி வெடி: பெரிதினும் பெரிது தேடும் உலகில் தலைக்கு என்ன மிஞ்சுவது தானம் எங்கே செய்வது?!

13.தொலையாத நிதியம் (சிக்கனம், சேமிப்பு பழக்கம்)

கண்ணி வெடி: பன்னிரெண்டாம் வெடியில் இதுவும் பணால்!

14.கோணாத கோல் (நேர்மையும் திறமையும் கொண்ட குடும்ப நிர்வாகம்)

கண்ணி வெடி: கோலாட்டமும் குதூகலமுமாய் மண இணை! இதில் கோல் எப்படி கோணாது போகும்?! வீட்டு நிர்வாகம் நண்டு சுண்டுகளின் கையில் (அவர்கள் இருக்கும் வீடுகளில்!). அவர்கள் கோலசைத்தால் பெரிதினும் பெரிது வேண்டி ராப்பகலாய் உழைக்கும் பெற்றோர் இருவரும் கடல் மணலையும் கயிறாக்கி விற்கும் பெருவணிகச்சந்தைகளில் 'அன்பு' வாங்கித்தருவர், அளவுக்கதிகமாய்!

15.உதவி பெரிய தொண்டரோடு கூட்டு (பெருமக்கள் தொடர்பு)

கண்ணி வெடி: 'பெரு'மக்கள் தொடர்பு கைகளில் தங்க காப்பு பூட்டும், பின் 'காப்பு'ம் பூட்டும் :-)

16.துய்ய நின்பாதத்தில் அன்பு (இறை நம்பிக்கை)

கண்ணி வெடி: வீதிக்கு இரண்டு கோவில் புதிதாய் கட்டி, பழையன தவிர்த்து, மண் தரை தெரியாது மெழுகி (இறை பாதம் துய்யதாய் இருக்கவேண்டி!) தளமிட்டு, கல் பதித்து...  நம்மைத்தவிர ஏனைய உயிரெதுவும் உள்நுழையாது காத்து...

பதினாறை சிந்தித்து வகைப்படுத்தியவர் இந்த வெடிகளில் இருந்து நம்மை விடுவிக்கும் சிந்தனயை நாலில் (4. குன்றாத வளமை) 'விதை'யாய் புதைத்தார். இந்த நான்காவதை மட்டும் நாம் காத்தாலே போதும், பெருவாழ்வு வாழலாம், பதினாறும் இன்னும் பலவும் தானே கிட்டும்!

'நான்கு' வளம் பெற, குன்றாது வளர நாம் செய்ய வேண்டியது மரம் நடுவது மட்டுமே!

இனியொரு மரம் நடுவோம் அதை எந்த நாளும் காப்போம்! பெருவாழ்வும் பல்லுயிரும் அதில் தானே விளைந்து பெருகும். நம் வாழ்வையும் நனைக்கும்.

மனிதர்க்கு மட்டுமல்லவே பூமி!



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்