முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சொர்க்கத்தோட்டத்தில் வெட்டுண்ட ஆப்பிள் மரங்கள்


உலகத்தை படைத்தது இறை என்று ஒரு பக்கம், இயற்கையென்று ஒரு பக்கம் - இன்றுவரை தொடரும் இந்த விவாதத்திற்கு விரைவில் விடை கிடைக்கலாம். அந்த விடை நமக்கு அவசியமற்றுப்போகலாம்.

கடவுள் படைத்த சொர்க்க தோட்டத்தில் ஒரு ஆப்பிள் மரப்பழத்தை இறை கட்டளையை மீறி உண்ட ஒரு மனிதன் சாபத்தால் / பாபத்தால் மண்ணில் விழுந்தானாம்.

விழுந்தவன் எழுந்து...  வாழத்தொடங்கினானாம்.

தன்னைச்சுற்றியுள்ள அனைத்தையும் தன் விருப்பத்திற்கு மாற்றியமைக்கும் வல்லமையை அந்த ஆப்பிள் அவனுக்கு தந்திருந்ததாய் அவன் நம்பினானாம். அந்த வல்லமை கொண்டு நதிகளின் போக்கை, காற்றின் போக்கை, கடலின் நீட்சியை, மலையின் மாட்சியை தன் விருப்பம் போல மாற்றி அமைக்கத்தொடங்கினானாம். 

இந்த தியரியை ஒத்துக்கொள்ளாத மனிதன் ஒருவன் 'மாற்றுவதை நிறுத்தி' தன்னை சுற்றி நடப்பவற்றை கவனித்தாலே போதும் என வாழ்வின் தொடக்கம் பற்றி இயற்கையிடம் பாடம் படித்தானாம். 'எந்த உயிரினம் இயற்கையோடு, இயற்கை மாற்றங்களோடு இயைந்து வாழ்கிறதோ அதற்கு மட்டுமே தொடர்ந்து வாழ, சந்ததி பெருக்க இயற்கை அனுமதி தரும்' என்பதாக அப்பாடம் இருந்ததாம்.

இவ்வாறாக இருவரும் தம் உலகைப்படைக்க முற்பட்டு பெரும் முன்னேற்றங்கள், பின்னடைவுகள் எல்லாம் தாண்டி ஏதோ ஒரு நிலப்பரப்பில் 'பேராசைப்பெருவணிகம்' என்ற இன்னொரு, அதி ஆற்றல் மிக்க ஆப்பிள் மரத்தின் நிழலில் சந்தித்து அதன் பழத்தை பகிர்ந்து ருசித்தனராம்.

ருசியில் மயங்கி, விவாதங்களை மூட்டை கட்டி வைத்து, இப்பழத்தை உலகம் முழுதும் பரப்பும் முயற்சியை தொடங்கி, பெரு வெற்றியும் பெற்றனராம்.

உலகெங்கும் வெற்றி கொண்ட பின்னர் அவர்கள் கவனம் சொர்க்கத்தோட்டத்து ஆப்பிள் மரங்களின்மீது திரும்பியதாம்.

அவர்கள் சொர்க்கத்தோட்ட மக்களை அழைத்து, 'உங்கள் மரங்கள் பழம் தர நெடுங்காலம் பிடித்தன. ஆனாலும் பழங்களை உண்டவர்கள் வாழ்வில் வெற்றிபெற்று எங்கள் நிலையை அடையவில்லையே. தவறு இந்த மரங்களில்தான். அடியோடு வெட்டி வீழ்த்துங்கள். நாங்கள் வேறு ஆப்பிள் மரக்கன்றுகள் தருகிறோம். விரைவில் காய்ப்பவை, ஏராளமாய்...

பறிப்பதும் சுலபம். உலகம் முழுதும் இதன் சந்தை. மாறுங்கள், மாற்றுங்கள், அதி விரைவில் உங்கள் வாழ்வை இவை மேன்மையாக்கும்' என்றனராம்.

இந்த ஆண்டு காஷ்மீர சொர்க்கத்தோட்டத்தில் உள்ளூர் மரங்கள், பல்லாண்டாய் இயற்கையோடு ஒத்திசைந்தவை, பெருவிசை எந்திரங்களால் ஒன்று விடாமல் வேர் அறுக்கப்பட்டு, ராயல் காலா, ராயல் டெலிஷியஸ், க்ரான்னி ஸ்மித் போன்ற இறக்குமதி செய்யப்பட்ட, காஷ்மீர இயற்கைக்கு பழகாத, மரக்கன்றுகளுக்கு தம் வாழ்விடத்தை விட்டுச்சென்றுவிட்டனவாம். 

இந்த இடம் போதாதென நெல் வயல்களும் எரிக்கப்பட்டு அவற்றின் சாம்பலை உண்டு குள்ள வகை ராயல்கள் மற்றும் க்ரான்னிகள்
வேகமாக வளர்கின்றனவாம்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் இப்போது இந்த புதிய மரக்கன்றுகளைச்சுற்றி நிலவும் மயான அமைதி, இயற்கைக்கு மட்டுமே புரியக்கூடியதாம்...


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...